சர்வதேச விமான நிலையம் ஒன்றில் இந்தியப் பயணிகள் பலர் வரிசையாகச் சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த இலவசச் சக்கர நாற்காலி சேவையைத் தகுதியற்ற பலரும் தவறாகப் பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகத்தை இந்தப் புகைப்படம் எழுப்பியுள்ளதுடன், இணையவாசிகளிடையே இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரல் பதிவிற்குப் பதிலளித்த பல இணையவாசிகள், இலவசமாக வழங்கப்படுவதாலேயே இச்சேவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், கட்டணம் அல்லது டாலர் விலைக் குறியீட்டை நிர்ணயத்தால் மட்டுமே இத்தகைய தவறான பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையிலேயே உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இதனால் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
https://twitter.com/zmx8067/status/1988762858709250313/video/1
அதேவேளையில், விமான நிலையங்களில் உள்ள நீண்ட தூரப் பாதைகள், ஆங்கில அறிவின்மை மற்றும் வழிகாட்டுதல் பலகைகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்கள் காரணமாகவே பலர் சக்கர நாற்காலி சேவையை நாடுகின்றனர் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, சக்கர நாற்காலி சேவையைத் தவிர்த்து, முதியவர்கள் விமான நிலையத்தை எளிதாகக் கடந்து செல்ல ‘வழிகாட்டுதல் உதவிச் சேவை’ போன்ற மாற்றுகளை அறிமுகப்படுத்தலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
