கனடாவில் மிசிசாகா மற்றும் பிராம்ப்டனில் உள்ள மருத்துவமனைகளில் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் 25 வயது இந்திய வம்சாவளி நபர் கனடா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பீல் பிராந்திய காவல்துறையின் (PRP) அறிக்கைப்படி, பிராம்ப்டனைச் சேர்ந்த வைபவ் என்ற நபர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வைபவ், பெண் மருத்துவர்களிடம் நெருங்குவதற்காக, போலியான மருத்துவப் புகார்களைக் கூறி, தவறான அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் இந்த செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு முழுவதும் பல மாதங்களாக இந்தத் தொல்லைகள் தொடர்ந்ததாகப் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பல மருத்துவமனைகளுக்குச் சென்ற வைபவ், பெண் மருத்துவர்களால் மட்டுமே பரிசோதிக்கப்பட வேண்டிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடித்ததாகப் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சந்திப்புகளின் போது, அவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், தவறான நோக்கத்துடன் சூழ்நிலைகளைக் கையாண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் சில சமயங்களில் “ஆகாஷ்தீப் சிங்” என்ற தவறான அடையாளத்தைப் பயன்படுத்தி மருத்துவமனை ஊழியர்களையும் மருத்துவர்களையும் ஏமாற்றியுள்ளார். வெவ்வேறு மருத்துவமனைகளில் தனது குற்றங்களைத் தொடரும் போது பிடிபடாமல் இருப்பதற்காக, திட்டமிட்டே இந்த அடையாள மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய காவல்துறை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
