CINEMA
சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் லிஸ்ட்லயே இல்ல… இந்திய சினிமாவில் முதல் முதலாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் எது தெரியுமா?
இந்தியா சினிமாவுக்கு வயது நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்திய சினிமா வணிக ரீதியாக பலப்பல மாற்றங்களைக் கண்டு மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் கலைப்படங்கள் வரிசையில் இன்னும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றோர் தொடங்கிவைத்த கலைப்பட போக்கு இன்னும் பெரியளவில் வளரவில்லை என்றே சொல்லலாம்.
பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் ஈரான் போன்ற சிறு நாடுகளில் இருந்தெல்லாம் படங்கள் வெளியாகி மிகப்பெரிய விருதுகளை வெல்கின்றன. இன்னும் அதுபோல இந்திய படங்கள் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் வங்காளம், கேரளா, மராத்தி மற்றும் தமிழில் நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்கிறது. திரையரங்குகள் மூலமாக 1000 கோடி வசூல் பண்ணிக் கலக்கும் பேன் இந்தியா படங்களும் ரிலீஸாகின்றன. ஆனால் முதல் முதலாக 100 கோடி ரூபாய் வசூல்செய்த இந்திய படம் எது தெரியுமா? அந்த பெருமையைப் பெருவது இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் என அறியப்பட்ட அமிதாப் பச்சனோ, ரஜினிகாந்தோ அல்லது கான் நடிகர்களோ இல்லை.
மிதுன் சக்ரவர்த்தி என்ற வங்காள நடிகர் நடித்த டிஸ்கோ டான்சர் என்ற 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அப்போது 6 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
ஆனால் இந்த படம் இரண்டு ஆண்டுகள் கழித்து சோவியத் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட போது அங்கு சக்கை போடு போட்டுள்ளது. அங்கு மட்டும் கிட்டத்தட்ட 2000 திரையரங்குகளில் ரிலிஸாகி 94 கோடி ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை டிஸ்கோ டான்சர் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படம் அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.