CINEMA
நாலே நாலு வரியை அரைநாள் பாடினாரு… ரஜினி மேல் செல்லக் கோபத்தைக் காட்டிய இளையராஜா!
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா தான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் முன்னணிப் பாடகர்களையே அதிகமாகப் பயன்படுத்தினார், புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் தரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டது. அதற்குக் காரணம், அவர் இருந்த பிஸிக்கு அவரால் புதியவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்கள் செய்யும் தவறுகளை சரிபண்ணி திருத்த முடியாது என்பதுதான்.
ஆனாலும் அவர் தொழில்முறை இல்லாத பாடகர்களையும் தன் இசையில் பாடவைத்துள்ளார். கமல்ஹாசன், விஜய், வடிவேலு ஆகியோர் இளையராஜா இசையில் பாடியுள்ளனர். அப்படிதான் ரஜினிகாந்தை தன்னுடைய இசையில் பாடவைக்கவேண்டுமென்ற முடிவை அவர் மன்னன் திரைப்படத்தில் செய்துள்ளார்.
அடிக்குது குளிரு என்ற பாடலின் இடையில் அவர் குரல் இடம்பெறும். அவருக்கு வரிகள் கம்மிதான். ஆனால் ரஜினியால் சரியாகப் பாடமுடியவில்லையாம். அந்த சில வரிகளையே ரஜினி கிட்டத்தட்ட அரைநாள் பாடினாராம். இதனால் இனிமேல் ரஜினியைப் பாடவே அழைக்கக் கூடாது என்ற முடிவை எடுத்துவிட்டாராம் இளையராஜா. இதை ஒரு இசைக் கச்சேரியில் இளையராஜா முன்னிலையில் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.