தமிழ் சினிமாவிற்கு இளையராஜா என்ற ஜாம்பவானைக் கொடுத்தது ‘அன்னக்கிளி’ திரைப்படம். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புயலாக வந்தார் இளையராஜா. அதன் பின்னர் ஐம்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் மையப் பேசுபொருளாக இருந்து வருகிறார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
இளையராஜா இசையமைப்பாளர் என்பதோடு மட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது மற்றும் அவரே பாடல்களைப் பாடுவது போன்ற பிற விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பெரும்பாலான பாடல்களின் முதல்வரியை அவரே மெட்டமைக்கும் போது பாடிவிடுவார் என்றும் அதை பாடல் ஆசிரியர்கள் அப்படியே வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வரிகளை எழுதுவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர் தான் பாடத் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் பற்றி கூறியுள்ளார். அதில் “பெரும்பாலும் நான் கம்போஸ் செய்து, பாடல் வரிகள் வந்தவுடனேயே இதை யார் பாடவேண்டும் என்று முடிவு செய்துவிடுவேன். ஆனால் ரெக்கார்டிங் போது அந்த பாடகர் இல்லை என்றால், வேறு பாடகரை தேடுவேன். அவரும் இல்லை என்றால்தான் கடைசியாக நானே பாடுவேன்.
ஆனால் ஒரு சில பாடல்கள் உள்ளன. ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’, ‘தென்றல் வந்து தீண்டும் போது’ போன்ற பாடல்கள். அவற்றை நானே பாடவேண்டும் என்று முடிவு செய்துதான் பாடினேன். ஏனென்றால் அந்த பாடல்களை என்னைத் தவிர வேறு யாராலும் பாடியிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
