சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. அதன் பின்னர் இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட்ஸ்களைக் கொடுத்தாலும் முன்பைப் போல அவர் பிஸியான இசையமைப்பாளராக இல்லை.

Ilaiyaraaja
இளையராஜா வழக்கமாக தன்னுடைய பாடல்கள் பற்றிக் கூட அதிகம் பேசமாட்டார். ஆனால் சமீபகாலமாக தன்னுடைய பாடல்களை எல்லாம் தான் எப்படி உருவாக்கினேன் என்று விளக்கம் சொல்லி, அதை இசைக் கலைஞர்களை வாசிக்க சொல்லி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி ஒன்றில் நடந்த உரையாடலில் பேசிய இளையராஜா “இசையமைப்பாளர்களிலேயே அதிகமான பாடல்களைப் பாடியது நான்தான். அதே போல அதிகப் பாடல்களை எழுதியதும் நான்தான். அதே போல குறைந்த நேரத்தில் அதிக பாடல்களை உருவாக்கியதும் நான்தான். இதெல்லாம் சொல்லி நானே என்னைப் பற்றி பெருமை பேசிக் கொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆமாம்… நான் பெருமைதான் பேசுகிறேன். ஆனால் என்னுடைய பெருமையைதான் பேசுகிறேன். நான் மற்றவர்களிடம் செல்வதில்லை” எனக் கூறியுள்ளார்.
