தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.
டி எம் சௌந்தர்ராஜன் 10000க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்த காலகட்டங்களில் அதிகளவில் மேடைக் கச்சேரிகளில் அவர் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தார். அதில் சினிமா மேடைக் கச்சேரிகளும் கோயில் திருவிழா போன்ற மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்று பாடல்களை பாடினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர். இளையராஜா தன் இசையில் டி எம் சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தவே இல்லை. அதற்கு இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டி எம் சௌந்தர்ராஜனின் மகள் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “எங்க அப்பா உச்ச ஸ்தாயியில் பாடி பாடி அவரின் காது கேட்கும் திறன் குறைந்தது. கடைசி காலத்தில்தான் அவர் ஹியரிங் எய்ட் வைத்துக் கொண்டார். ஒருமுறை இளையராஜா இசையில் பாட சென்ற போது அவர் சொன்ன கரெக்ஷன் இவர் காதில் சரியாக விழவில்லை போல.
அதனால் இளையராஜா அப்பாவைத் திட்டியுள்ளார். நீங்க வேற எங்க வேணா எப்படி வேணா பாடிக்குங்க. ஆனால் என் இசையில் பாடும்போது நான் சொல்லிக் கொடுக்கும்படிதான் பாடவேண்டும் எனத் திட்டிவிட்டார். அதனால் அப்பாவும் அந்த பாடலை பாடாமல் வந்துவிட்டார். அதன் பின்னர் இளையராஜா அவரைக் கூப்பிடவும் இல்லை. ஆனால் அப்பா அவரைப் பற்றி எல்லோரிடமும் நல்ல விதமாகதான் சொல்லுவார்” எனக் கூறியுள்ளார்.
