தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார்.
இந்நிலையில் இளையராஜா பற்றி ஒரு சுவாரஸ்யமானத் தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஹேராம் படத்துக்கு முதலில் வேறொரு இசையமைப்பாளரைதான் நியமித்திருந்தேன். பாடல்களுக்காக நிறைய செலவு செய்து படமாக்கியிருந்தோம். ஆனால் திடீரென அந்த இசையமைப்பாளர் வெளியேறியதால் மீண்டும் இளையராஜாவிடம் சென்றேன்.
அவர் நீங்க எடுத்தக் காட்சிகளை வைத்தே நான் இசையமைத்துத் தருகிறேன் என்றார். எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அவர் எந்த பயமும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அப்படி நாங்கள் எடுத்தக் காட்சிகளை வைத்து அவர் உருவாக்கியதுதான் ஹேராம் பாடல்கள். இதனால் எங்களுக்கு ஏற்பட இருந்த பெரிய செலவை அவர் இல்லாமல் ஆக்கினார்” எனக் கூறியுள்ளார்.