தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. கௌதம் மேனன் தன்னுடைய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரைதான் அதிகமாகப் பயன்படுத்தினார்.
முதல் முறையாக நீதானே என் பொன்வசந்தம் படத்துக்காக இசைஞானி இளையராஜாவை அணுகினார். அந்த படத்துக்கு இளையராஜா அற்புதமான பாடல்களை கொடுத்தார். அந்த படம் இளையராஜாவை தற்போதைய காலகட்ட இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. அந்த படத்துக்காக இளையராஜாவை சந்தித்து அவரிடம் கதை சொன்ன சம்பவத்தைப் பற்றி கௌதம் மேனன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
அதில் “நான் என்னுடைய படங்களுக்கு இளையராஜாவை கேட்பதற்கு எனக்கு ஒரு பயம் இருந்தது. அவரிடம் நீதானே என் பொன் வசந்தம் படத்துக்காக சென்ற போது, முதலில் அவர் நீங்கள் எப்போதும் ஹாரிஸுடன்தானே பணியாற்றுவீர்கள் எனக் கேட்டார். நான் உங்களோடு ஒரு படம் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனக் கூறியதும் ஒத்துக்கொண்டார்.
முதல் நாளிலேயே ஐந்து பாடல்களை சரசரவெனப் போட்டுத்தந்தார். நான் இன்றைக்கு இது போதும் என்று சொன்னாலும் அவர் முடித்துவிடலாம் என சொல்லிக் கொண்டே இருந்தார். மெட்டுக்களை நான் கேட்டுக் கொண்டிருந்த போது ‘இந்த படத்துக்கு பாடல்கள் மட்டும் முத்துக்குமார் எழுதட்டும்’ என சொன்னார். அதை மட்டும்தான் அவர் நிபந்தனையாக வைத்தார்” எனக் கூறியுள்ளார். கௌதம் மேனன் எப்போதும் தாமரையோடு இணைந்துதான் பாடல்களை எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.