“இந்த பாட்டுக்கு ரசிகர்கள் கைதட்டுலன்னா நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்” – பாலச்சந்தரிடம் சவால் விட்ட இசைஞானி!

By vinoth on மாசி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 1992 ஆம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான் வரும் வரை தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கினார். படத்தின் போஸ்டரில் இளையராஜாவின் புகைப்படத்தை போட்டாலே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிக் கொள்ளும் சூழல் நிலவியது.

   

ஒரு ஆண்டில் அதிகபட்சம் 55 படங்களுக்கு எல்லாம் இசையமைத்து சாதனைப் படைத்துள்ளார். எந்தவொரு பாடலுக்கும் அவர் மெட்டமைக்க அமர்ந்து என்னால் முடியாது என்று எழுந்ததே இல்லை. ஒரு படத்தின் அனைத்து பாடலையும் அரைமணி நேரத்துக்குள் எல்லாம் மெட்டமைத்து இயக்குனர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

   

ஆனால் அவர் ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க மட்டும் ஹோம் வொர்க் செய்துள்ளார். 1986 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுஹாசினி நடிப்பில் இளையராஜா இசையமைத்த படம் சிந்து பைரவி. அந்த படத்தில் இடம்பெற்ற மரி மரி நின்னே பாடலின் சூழ்நிலையை பாலச்சந்தர் சொன்ன போது, அதில் ஆர்வம் ஏற்பட்டு அந்த பாடலுக்கு தியாகராஜர் கீர்த்தனையில் உள்ள ஒரு ராகத்தில் மெட்டமைக்க வேண்டும் என வீட்டுக்கு சென்று புத்தகங்களைப் படித்துள்ளார் இளையராஜா.

 

அதன் பின்னரே மரி மரி நின்னே பாடலையும், பாடறியேன் படிப்பறியேன் பாடலையும் ஒரே ராகத்தில் வரும்படி மெட்டமைத்துள்ளார். இந்த பாடலை ரெக்கார்ட் செய்து கொடுக்கும் போது பாலச்சந்தரிடம் ‘இந்த பாட்டு முடியும் போது ரசிகர்கள் கைதட்டவில்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்’ என சவால் விட்டுள்ளார்.

படம் ரிலீஸ் ஆனதும் அவர் சொன்னபடியே ரசிகர்கள் அந்த இடத்தில் கைதட்டி ரசித்துள்ளனர். அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த இயக்குனர் பாலச்சந்தர் இந்த படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அப்படியே இளையராஜாவுக்கு அந்த படத்துக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.