தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 70 களில் இறுதியில் இருந்து 90 களின் தொடக்கத்தில் ரஹ்மானின் அறிமுகம் வரை என்று சொல்லலாம். அதன் பின்னரும் அவர் தீவிரமாக இயங்கினாலும் அவரின் புகழ் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 80கள்தான். அப்போதெல்லாம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50 படங்கள் வரை இசையமைத்துள்ளார். இதனால் அவருக்கு ஒருநாள் கூட ஓய்வு கிடைக்காத சூழலே இருந்துள்ளது.
இளையராஜாவுக்கு உடல்நலம் குன்றி ஒரு அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ரஜினிகாந்த் படத்துக்காக அவசரமாக ஒரு பாடல் தேவைப்பட்டுள்ளது. இதைப் படக்குழுவினர் இளையராஜாவிடம் சொல்ல, அவர் மருத்துவமனையில் படுத்தபடி வாயாலே விசிலடித்து ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார். அதை வைத்தே பாடலை எழுதி ரெக்கார்ட் செய்து ஷூட்டும் செய்துவிட்டனர்.
அப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் ஏனோதானோவென்று ஒரு பாடலை இளையராஜா கொடுத்துவிடவில்லை. அது என்ன பாடல் என்று தெரிந்தால்தான் இளையராஜாவின் மாயாஜாலம் தெரியும். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலைதான் அப்படி கம்போஸ் செய்தாராம் இளையராஜா. இன்றளவும் ரசிகர்களால் கேட்டுக் கொண்டாடப்படும் பாடலாக அந்த பாடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
