பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.
இதில் இயக்குனர் அமீர் கொடுத்த உச்சமான படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.
இந்த படத்தில் கார்த்திக்கு அடுத்த முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது சரவணனின் செவ்வாழைக் கதாபாத்திரம்தான். அதில் சரவணனின் நடிப்பு ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது. சரவணன் அதற்கு முன்னர் கதாநாயகனாக 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் பருத்திவீரன் தந்த புகழை வேறு எந்த படமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
ஆனாலும் அத்தகைய புகழ் கிடைத்தாலும், சரவணனுக்கு அதற்குப் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் அமீர் “பருத்திவீரன் படம் முடிந்ததும் என்னை வந்து பார்த்தது அவர் ஒருவர்தான். மதுரையில் என் வீட்டுக்கு வந்தார். அவருடைய ரசிகர் மன்ற ஆட்களை எல்லாம் அழைத்து வந்து மாலைபோட்டார்.
அப்போதே நான் அவரிடம் ஹீரோவாக இனிமேல் நடிக்காதீர்கள். குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்துங்கள். பிரகாஷ்ராஜ் போல வரலாம் என்று கூறினேன். ஆனால் அவர் அதைக் கேட்காமல் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று வந்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்கிவிட்டார். அதனால்தான் அவரால் பெரிய ஆளாக வரமுடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.