பயந்து பயந்து பின்னணி இசைப் பிடிக்கவில்லை என சொன்ன இயக்குனர்.. ரெக்கார்டிங்கை கேன்சல் செய்துவிட்டு இளையராஜா செய்த செயல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

கமர்ஷியல் படங்களுக்கு ஏற்றவாறு ஒரு இசையும், கலைத்தன்மை கூடிய படங்களுக்கு ஏற்றவாறு கலையமைதி கொண்ட பின்னணி இசையையும் அமைப்பதில் இளையராஜா வல்லவர். அவர் கமர்ஷியல் இயக்குனர் எஸ் பி முத்துராமனின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மலையாள இயக்குனரான ஆடூர் கோபாலகிருஷ்ணன் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இரண்டுமே அதனதன் அளவில் மிகச்சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில் பின்னணி இசையில் தனக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா பிரேமா என்ற தெலுங்கு படத்தை 1989 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். அந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அப்போது அந்த படத்தின் பின்னணி இசை “நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு இளையராஜாவிடம் இருந்து நல்ல இசை வேண்டாம். சூப்பரான இசை வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு இளையராஜா அன்றைய ரெக்கார்டிங்கை கேன்சல் செய்துவிட்டு இசைக் கலைஞர்களை அனுப்பியுள்ளார்.

அதனால் பதறிப் போன சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து “தெலுங்கு தயாரிப்பாளர்கள் நிறைய சம்பளம் கொடுப்பார்கள். அதனால் அந்த பணம் எல்லாம் பின்னணி இசையாக திரையில் தெரியவேண்டும் என ஆசைப்படுவார்கள். அதனால் படத்துக்கு நான் இசையமைத்தேன். ஆனால் ஒரு இயக்குனராக நீ சொல்வது சரிதான். அதனால் உனக்கு நாளைக்கு இந்த படத்துக்காக வேறு மாதிரி இசையமைக்கிறேன்” என்று சொன்னாராம்.