CINEMA
இளையராஜா நிறைய படத்தில் நடித்திருக்கிறார்… ஆனா எல்லாத்துலயும் ஒரு ஒற்றுமை இருக்கு – உலகத்துல யாருக்குமே இப்படி நடந்திருக்காது!
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது.
தமிழ்சினிமாவில் இசையைத் தவிர வேறு சில துறைகளிலும் இளையராஜா கால்பதித்துள்ளார். தயாரிப்பாளராக அவர் சில படங்களைத் தயாரித்துள்ளார். பாவலர் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது அண்ணன் பாஸ்கர் என்பவரோடு இணைந்து சில படங்களைத் தயாரித்துள்ளார்.
அதே போல சில படங்களில் அவர் கதாபாத்திரமாக தோன்றியுள்ளார். வாழ்க்கை படம் முதல் கரகாட்டக்காரன் வரை சில படங்களை சொல்லலாம். ஆனால் அவர் தோன்றிய படங்களில் எல்லாமே அவர் இசையமைப்பாளர் இளையராஜாவாகவே தோன்றியுள்ளார். அவரிடம் இயக்குனர்கள் பாடல் கேட்டு வருவது போலவும், அது சம்மந்தமானக் காட்சிகளிலும்தான் அவர் நடித்துள்ளார் என்பதுதான் தனிச்சிறப்பு.