CINEMA
‘பாண்டியா டைரக்டர் ஆகணும்னா அத மட்டும் செஞ்சுடாதா’… பாண்டியராஜனுக்கு பாக்யராஜ் கொடுத்த அட்வைஸ்!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்னர் 77 ல் இருந்து 80 வரை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது பாரதிராஜா கொடுத்த சூப்பர் ஹிட் படங்களுக்கு பாக்யராஜின் உதவியும் முக்கியக் காரணமாக அமைந்தது. 16 வயதினிலே திரைப்படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களை பாக்யராஜ் சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியதும் பாக்யராஜ்தான்.
பாக்யராஜ் எப்படி பாரதிராஜாவிடம் இருந்து வந்தாரோ, அதுபோலவே பாக்யராஜிடம் இருந்து பாண்டியராஜன், பார்த்திபன், ஜி எம் குமார் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் வந்தனர். அதில் முதலில் இயக்குனர் ஆனது பாண்டியராஜன்தான்.
பாண்டியராஜன், தனக்கு இயக்குனர் வாய்ப்பு வந்ததை தன்னுடைய குருநாதர் பாக்யராஜிடம் அதை சொன்னது குறித்து தற்போது ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கு இயக்குனர் வாய்ப்பு வந்தது. அப்போது அதை எனது இயக்குனர் ரிலாக்ஸாக இருக்கும் நேரமாகப் பார்த்து சொன்னேன். அப்போது அவர் என்னைப் பார்த்து “நல்ல படமா எடுடா… பாண்டியா ஒரே ஒரு அட்வைஸ்தான் நான் சொல்வேன். படத்தை டைரக்ட் பண்ணா தப்பிச்சிக்கலாம். ஆனா டைரக்ட் பண்ற மாதிரி நடிச்சீன்னா மாட்டிக்குவ என அறிவுரை சொன்னார்” என தெரிவித்துள்ளார்.