தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு ஆய்வும் கோட்பாடும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தேசியம் குறித்த விவாதங்களை முன்னெடுத்து வரும் இயக்கம் விசிக எனக் குறிப்பிட்ட அவர், “அன்னை தமிழைக் காப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம்” என்ற அடிப்படையில், பிறமொழி வெறுப்போ அல்லது இனவாதமோ இன்றி தமிழ் தேசிய உரிமைகளுக்காகப் போராடுவதே தங்களது கொள்கை எனத் தெளிவுபடுத்தினார்.
உலகத் தமிழர்களுக்கான அங்கீகாரக் குரல்
தொடர்ந்து பேசிய அவர், தனித் தமிழ்நாடு கோரிக்கையைத் தமிழரசனும், தமிழீழக் கோரிக்கையைப் பிரபாகரனும் முன்னெடுத்ததை நினைவுகூர்ந்தார். உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையிலும், ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களுக்கான தனி அங்கீகாரமோ, கொடியோ மற்றும் பாதுகாப்பிற்கான குரலோ இல்லாத சூழல் நீடிப்பதாக ஆதங்கம் தெரிவித்தார். உலக அரங்கில் தமிழர்களின் உரிமைகளையும் வேட்கையையும் உரக்கப் பேசுவதற்கான களமாகவே இந்தத் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக பட்ஜெட் மற்றும் பெயர் மாற்ற விமர்சனம்
தமிழக பட்ஜெட் குறித்துப் பேசிய திருமாவளவன், சமூக நீதித்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கும், அயல்நாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் போன்றவற்றின் நிதி உயர்த்தப்பட்டிருப்பதற்கும் முதலமைச்சருக்கும் நிதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ஆட்சி மாற்றத்தின் போது பெயர் மாற்றங்கள் நிகழ்வது வழக்கமானதுதான் என்றும், பெயர்கள் மாறினாலும் எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் முடங்காமல் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை வரவேற்பதாகவும் பாராட்டினார்.
வேளாண் பட்ஜெட் மற்றும் காவிரி நீர் விவகாரம்
தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப விவசாயிகளின் பயிர்க்கடன்களை நிபந்தனைகளின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தினார். குறிப்பாகச் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், காவிரி விவகாரத்தில் மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அவர், பெங்களூரில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட அனைவருக்கும் தற்போதைய கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மூலமாகவே குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
