ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டரான இவர் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த சீசனிலேயே தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்த வைபவ், 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான அணுகுமுறை குறித்து சஞ்சு சாம்சன் ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஐபிஎல் அறிமுகத்திற்கு முன்பு ஜாம்பவான் ராகுல் டிராவிட், வைபவ்விடம் அவரது ‘கேம் பிளான்’ குறித்துக் கேட்டபோது, “பந்து எனது ஜோனுக்கு வந்தால் அதை காற்றில் பறக்க விடுவேன், அவ்வளவுதான்” என்று மிக எளிமையாகவும் அதேசமயம் நம்பிக்கையுடனும் பதில் அளித்தாராம். இதைக் கேட்ட டிராவிட்டே ஒரு நிமிடம் வியந்து போனதாக சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார். களத்தில் இவரது ஆட்டம் ஒரு வீடியோ கேம் விளையாடுவது போல மிக வேகமாகவும் அதிரடியாகவும் இருக்கும் என அவர் பாராட்டியுள்ளார்.
இளம் வயதிலேயே மிகப்பெரிய இலக்குகளைக் கொண்டுள்ள வைபவ், ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெயில் படைத்த 175 ரன்கள் சாதனையை முறியடிப்பதே தனது லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2025 சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் குவித்த இவர், ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களையே தனது அதிரடியால் மிரள வைத்துள்ளார். இந்திய அணிக்குள் நுழைவதற்கான தகுதிகள் இவரிடம் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2026 ஐபிஎல் சீசனில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வைபவ்வை வழிநடத்திய சஞ்சு சாம்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறிவிட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரியான் பராக் வழிநடத்தவுள்ளார். புதிய தலைமையின் கீழ் விளையாடப்போகும் வைபவ்விற்கு இந்த சீசன் மிகவும் முக்கியமானது. இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க இந்த இளம் புயல் இந்த முறையும் தனது ‘வீடியோ கேம்’ பாணி அதிரடியைத் தொடருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
