தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்த பூக்கடை மகேந்திரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்ற தனது கடைசி ஆசையை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக அரசியல் களத்திலும், கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் தொடர் பிளவுகளும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டு, பின்னர் வேலுமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த போதிலும், கட்சியின் சீனியர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொண்டர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனிக்கட்சியாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். பல முன்னாள் சீனியர்கள் தவெகவில் இணைந்து அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் பொறுப்பு வகிக்கும் சூழலில், அதிமுகவின் இந்த அடுத்தடுத்த பிளவுகள் எளிய தொண்டர்களை மன ரீதியாகப் பெருமளவில் பாதித்துள்ளது என்பதை பூக்கடை மகேந்திரனின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அவர் தனது கடைசி வீடியோ பதிவில், “கட்சியில் சில நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது என்னைப்போன்ற எளிய தொண்டர்கள் கடுமையான மன வேதனையில் இருக்கிறோம்; மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், “என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சுயநலமின்றி ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். எனது கடைசி ஆசையாக, நான் வணங்கும் மனித தெய்வம் எடப்பாடியார் எனது உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவிக்க வேண்டும். மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தால் அதிமுகவின் எளிய தொண்டனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் ஒற்றுமைக்காகவும், மீண்டும் பலமான அதிமுக உருவாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு விசுவாசமிக்க தொண்டர் தனது உயிரையே மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த அதிமுகவினரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
தன்னுடைய மரணத்திற்குப் பிறகாவது கட்சித் தலைவர்கள் ஒன்றுபட மாட்டார்களா என்ற மகேந்திரனின் இந்த விபரீத முடிவு அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட நிர்வாகி பூக்கடை மகேந்திரனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவம், தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில் அதிமுகவின் எதிர்கால ஒற்றுமையை நோக்கி தலைவர்களைச் சிந்திக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…