“கோடி கொடுத்தால்தான் சீட்டா?”…. எடப்பாடிக்கு மிகப்பெரிய செக்…. கதறி அழுது விலகிய அதிமுக மூத்த புள்ளி…. வெளிவந்த பகீர் கடிதம்…..!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான முருகுமாரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான இவர், மாணவப் பருவம் முதலே அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எஃகு கோட்டையாக இருந்த அதிமுக தற்போது தடம் மாறிச் செல்வதாகக் கூறி, கட்சியின் தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது விலகல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

கட்சித் தலைமைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்களைத் தாயன்போடு அரவணைத்து வழிநடத்திய உன்னதத் தலைவர்களாகத் திகழ்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தற்போதைய தலைமை உழைத்தவர்களை ஒதுக்கிவிட்டு, பண பலம் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகச் சாடியுள்ளார். தியாகமும் கொள்கை உறுதியும் கொண்ட ஏழை, எளிய தொண்டர்கள் இனி அதிமுகவில் அரசியல் அதிகாரம் பெற முடியாது என்றும், கொள்கையை இழந்து கோடிகளில் தவழும் நிலைக்கு இயக்கம் தள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

   

பொதுக்கூட்ட பேச்சாளராகவும், ஊடகப் பங்களிப்பாளராகவும் கட்சிக்குத் தொடர்ந்து உழைத்த நிலையிலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை துரோகம் என்று முருகுமாரன் குறிப்பிட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இரவு பகலாகப் பணியாற்றிய தன்னைத் தலைமை ஊதாசீனப்படுத்தியதாகவும், மாற்று இயக்கங்களில் இருந்து வந்த அழைப்புகளை நிராகரித்து கட்சிக்கு உண்மையாய் இருந்தும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக என்ற பேரியக்கத்தின் தலைமை எப்போதும் தவறான முடிவுகளின் பின்னே செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

   

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு கட்சி சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக, ஏற்கனவே மூத்த நிர்வாகிகள் பலரும் விலகி மாற்று முகாம்களுக்குச் சென்று வருகின்றனர். செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செம்மலை போன்றவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றவர்கள் திமுகவிலும் இணைந்துள்ள நிலையில், முருகுமாரனின் இந்தத் திடீர் விலகல் அதிமுக நிர்வாகிகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

“மதியாதார் வாசல் மிதியாதே” என்ற முதுமொழியை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள அவர், தற்போதைய தலைமையின் தவறான வழிகாட்டுதலால் கட்டுக்கோப்பான இயக்கம் இன்று பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாற்று இயக்கங்களில் இருந்து வந்த பல கோடி ரூபாய் சலுகைகளைப் புறந்தள்ளி கட்சிக்கு உண்மையாய் இருந்த நிலையில், இன்று தன்னைக் காயப்படுத்திய தலைமையை நம்பிக் கெட்டவர்களில் தானும் ஒருவன் என்று கூறி மிகுந்த மனவலியுடன் அதிமுகவில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.