சண்டிகார் அருகிலுள்ள பிஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு பொட்டிக் கடையில், ராஜேந்தர் கவுர் (42) என்ற பெண் தனது கணவரைக் கொலையாளியாகக் குறிப்பிட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் தனது டைரியில் எழுதியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் அளவு கோல்களுக்கு அருகில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அந்த இரத்தக் கரைகள் படிந்த பக்கத்தில், “என் கணவர்தான் என் கொலையாளி” என்று அவர் தனது கடைசி மூச்சில் எழுதியுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தனது மரணத்திற்கு கணவர் மட்டுமல்லாமல், தனது மாமியார், இரண்டு நாத்தனார்கள் மற்றும் ஒரு மைத்துனர் ஆகியோரும் காரணம் என்று அவர் பகிரங்கமாகப் குற்றம் சாட்டியுள்ளார். ஒருபுறம் ஆடை வடிவமைப்புக்கான அளவுகள் எழுதப்பட்டிருக்க, மறுபுறம் ஒரு பெண்ணின் மரண வாக்குமூலம் ரத்தத்தில் பதிவான அந்தச் சூழல் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குடும்பத் தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ள கணவர் மற்றும் குடும்பத்தினரைத் தேடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
