தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் மீதான விவாதத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தஃபா என்கிற மதார் பதுருதீன் ஆளுங்கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய சமுதாய மக்கள் 10 சதவீத இடஒதுக்கீடு கோரிய நிலையில், குறைந்தபட்சம் தற்போதிருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டையாவது உயர்த்தி வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்குப் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றைக் கேட்டு அதிருப்தியடைந்த திமுக உறுப்பினர்கள், உடனடியாகத் தங்களின் கடுமையான எதிர்ப்பை அவையில் பதிவு செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது. அவையின் மாண்பைக் காக்கும் விதமாக உடனடியாகத் தலையிட்ட சபாநாயகர், தவெக எம்.எல்.ஏ-வைக் கண்டித்ததுடன், விவாதத்தைக் கைவிட்டு அவரை அமைதியாகத் தனது இருக்கையில் அமருமாறு உத்தரவிட்டார்.
பேரவையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னர் பேசிய சபாநாயகர், முந்தைய ஆட்சியாளர்களின் சாதனைகளைப் பற்றிப் பேசத் தடையில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஹஜ் பயணத்திற்குச் செய்யப்படும் உதவிகளைப் போலவே கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கும் உதவ வேண்டும் என்று தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 பேருக்கு தலா ரூ. 20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை நினைவுகூர்ந்தார். மேலும், கடந்த காலங்களை விடத் தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காகக் கூடுதல் நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் எனத் துறை அமைச்சர் சபையில் உறுதியளித்துள்ளதையும் சபாநாயகர் எடுத்துரைத்தார்.
