கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூர்யகாந்த் என்பவருடன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அர்ச்சனாவுக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
அர்ச்சனாவின் பெற்றோர் வீட்டிலிருந்து கூடுதல் நகைகளைக் கேட்டு சூர்யகாந்த் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகை கோரிக்கை தொடர்பான தகராறே அர்ச்சனாவின் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்த பின்னர், அர்ச்சனா கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது போல் நாடகமாடி காவல்துறையை திசைதிருப்ப சூர்யகாந்த் முயன்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிஞ்சோளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
