இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்று அதற்குச் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட முதன்மை குற்றவாளி மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி ஒருவர் பணி நிமித்தமாகச் சென்றபோது படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகள் மீது எவ்விதத் தாட்சண்யமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
