கர்நாடக மாநிலம் ஹூன்சூரில் 49 வயதான ஹரீஷ் என்ற நபர், தனது மனைவி நிச்சிதா (36) மற்றும் இரு குழந்தைகளான நெக்ஸா (12), ரக்ஷா (6) ஆகியோரைத் மூச்சுத்திணறடித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஹரீஷ், 6 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அதில், நிலம் வாங்கியதில் ஏற்பட்ட பெரும் கடன் சுமை மற்றும் தொடர் தோல்விகளால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தான் மட்டுமே உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்த அவர், தனது வீடுகள், நிலங்கள் மற்றும் வாகனங்கள் யாருக்குச் சேர வேண்டும் என்றும் கடிதத்தில் விரிவாக எழுதியுள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் எண்ணத்தை மாற்றிக்கொண்டு மனைவி மற்றும் பிஞ்சுக் குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மைசூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
