இந்து மத வழிபாட்டில் விளக்கு என்பது மிக முக்கியமான ஒன்று. எந்த ஒரு பூஜையை தொடங்கும் முன்னர் விளக்கேற்றி தொடங்குவது முறை. திருவிளக்கு வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வருகிறது. தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கி போற்றி உள்ளனர். சங்ககால இலக்கியங்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
திருவிளக்கு மகாலட்சுமியின் அம்சம் ஆகும். கோவில்களில் அனைவரும் ஒன்று கூடி திருவிளக்கு பூஜை செய்வதை பார்த்திருப்போம். வீடுகளில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி பூஜையின் போது என்னென்ன விஷாயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.
வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வதால் அஷ்டலட்சுமிகளின் ஆசி கிடைத்து நம் வாழ்க்கை சகல சௌபாக்கியத்துடன் இருக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பின் போது, பௌர்ணமி, அமாவாசை, தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் சிறப்பு. திருவிளக்கை மகாலட்சுமி தேவியாக அன்னையாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். திருவிளக்கு பூஜை செய்வதற்கு முன் சுத்தமாக பூஜை அறை மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். திருவிளக்கை சுத்தப்படுத்திய பிறகு சந்தனம் குங்குமம் இடவேண்டும்.
திருவிளக்கில் எட்டு பாகத்தில் பொட்டிட வேண்டும். அவை உச்சி முகங்கள், ஐந்து தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை ஆகும். இந்த எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்யா லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
இந்த விளக்குக்கு எட்டு போட்டுகள் வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்கள் சூரியன் சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள் ஆத்மா மற்றும் உயிராகிய தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிப்பதாக வேதங்கள் கூறுகிறது. திருவிளக்கு பூஜை செய்யும் முன்பு கிழக்கு நோக்கி விளக்கை வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
திருவிளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும். விளக்குகளை சுத்தமான தாம்பூலம் அல்லது பலகையில் வைக்க வேண்டும். அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ள வேண்டும். திரிகள் புதியதாகவும் கெட்டியதானதாகவும் இருக்க வேண்டும். திருவிளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல் துணை விளக்கு ஏற்றி அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
இந்த திருவிளக்கு பூஜையை சுமங்கலிகள் கன்னிப்பெண்கள் சேர்ந்து வழிபாடு செய்யலாம். திருவிளக்கு அகவல் மற்றும் போற்றிகளை அன்றைய தினம் பாடி வணங்க வேண்டும். பூஜை முடியும் வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும் ஒருவர் உயர்த்தியும் ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது. குடும்பம் விருத்தி அடைய வேண்டும் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டி திருவிளக்கு பூஜை செய்யும்போது நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.