ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பழைய குண்டூர் – பொன்னூர் சாலையில் நெஞ்சை பதறவைக்கும் கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மற்றும் மகன் இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென பரவியதை அடுத்து, மகன் உடனடியாக காரின் கதவைத் திறந்து வெளியே குதித்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தந்தையின் பக்கத்திலிருந்த கதவு திறக்காததால், அவரால் வெளியே வர முடியாமல் காரினுள்ளேயே சிக்கிக்கொண்டார். கண் இமைக்கும் நேரத்திற்குள் கார் முழுமையாகத் தீயில் எரிந்து சாம்பலானதில், தந்தை உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண் முன்னே நடந்த இந்த பயங்கர விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த சோகமும் அடைந்தனர். இது குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் தந்தை தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் எப்படி தீப்பற்றியது மற்றும் அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
