சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் ஓட்டுநர் 2,000 ரூபாய் மதிப்பிலான டீசலை நிரப்பக் கேட்டுள்ளார். எரிபொருள் நிரப்பப்பட்டதும், விற்பனையாளர் பங்கஜ் பணம் கேட்டதற்கு, ஓட்டுநர் அவரைத் திட்டிவிட்டு பங்கஜின் கையை கார் கண்ணாடியில் சிக்கவைத்து வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
பங்கஜின் அலறலைக் கேட்காமல் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று, நிஜாம்நகர் டி-பாயிண்ட் அருகே அவரை சாலையில் தள்ளிவிட்டுள்ளார். சக ஊழியர்கள் பங்கஜை மீட்டு நிலையத்திற்கு அழைத்து வந்ததும், மேலாளர் நீரஜ் சவுகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் எஸ்பிஓ மனோஜ் பால்யான் தெரிவித்துள்ளார்.
