திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரது வாயைத் துணியால் அடைத்துத் தாக்கிப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
அதிகாலையில் பால் கறப்பதற்காக வந்த பால்காரர் மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு கதவைத் தட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் வீட்டிலிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை அக்கம் பக்கத்தினர் விரட்டிப் பிடித்துக் கட்டிப்போட்டனர். ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்த மூதாட்டியை மீட்டுத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த வடமதுரை காவல்துறையினர், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலம் பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியான பால்சாமி (27) என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
