கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். அதே மருந்தகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த 37 வயதான ரஞ்சித்குமார் என்ற திருமணமான நபர், அந்த இளம்பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள் உள்ளனர். தான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலிப்பதாக இளம்பெண் கூறியும் ரஞ்சித்குமார் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை.
இதனால் அந்த இளம்பெண் தனது வேலையை விட்டு நின்றபோதிலும், ரஞ்சித்குமார் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து, தானும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற போலிப் படங்களை உருவாக்கியுள்ளார். பின்னர் அந்தப் படங்களை அந்த இளம்பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் அனுப்பி, தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, மிரட்டலில் ஈடுபட்ட ரஞ்சித்குமாரைக் கைது செய்தனர். மேலும், அவரது செல்போனைக் கைப்பற்றி அதில் இருந்த மார்பிங் புகைப்படங்களை நீக்கிய போலீசார், அந்தப் படங்களை வேறு யாருக்காவது அவர் அனுப்பியுள்ளாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
