ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் பிணைக் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சமரச முயற்சியில் ரஷ்யா தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும் என்பதால், பேச்சுவார்த்தையை முடக்கும் வகையிலான அவசர ஒப்பந்தங்கள் எதிலும் இப்போது கையெழுத்திட விரும்பவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உண்மையான விருப்பமில்லை என்று டிரம்ப் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்தும் தொடர் தாக்குதல்களால் உலக அளவிலும் அமெரிக்காவிலும் எரிபொருள் சந்தை கடும் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், இது விவசாயிகள் மற்றும் தொழில் துறையினரை வெகுவாகப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிடமிருந்து பெருமளவில் நிதி மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்தபோதிலும், போரை நிறுத்துவதில் ஜெலென்ஸ்கி மெத்தனமாக இருப்பதாக டிரம்ப் சாடியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உக்ரைனால் சிறந்ததொரு அமைதி ஒப்பந்தத்தை எட்டியிருக்க முடியும் என்றும், போரினால் உக்ரைன் தனது நிலப்பகுதிகள், உட்கட்டமைப்புகள் மற்றும் எண்ணற்ற மனித உயிர்களை இழந்து பெரும் பேரழிவைச் சந்தித்து வருவதால், விரைவில் அமைதி திரும்புவதே உலகிற்கு நல்லது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
