சொந்த பாட்டி என்றும் பார்க்காமல்.. போதை தலைக்கேறியதால் பேரன் செய்த வெறிச்செயல்.. செங்கல்பட்டில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

By Muthu Mani on ஆனி 10, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி சரோஜா, வயது முதிர்வு காரணமாக அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு புலம்பும் வழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டின் வாசலில் கட்டிலில் படுத்திருந்த சரோஜாவை பார்க்க அவரது பேரன் மகேஷ் (26) என்பவர் முழு மது போதையில் வந்துள்ளார். அப்போது பாட்டி தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த மகேஷ், “எப்போதும் ஏன் புலம்பிக்கொண்டே இருக்கிறாய்?” எனக் கேட்டு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் நிலைதடுமாறிய மூதாட்டி சரோஜா, கட்டிலிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சரோஜாவின் இளைய மகன் ராஜி, தனது தாய் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து சரோஜாவின் மற்றொரு பேரனான கார்த்திக் அளித்த புகாரின் பேரில், சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது போதையில் பாட்டியைத் தாக்கியதை மகேஷ் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகேஷ், செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மது போதையில் பேரனே பாட்டியை அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.