ஹைதராபாத் பாரடைஸ் சிக்னல் பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தெலங்கானா அரசுப் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் ஒருவர் பேருந்தின் கதவைத் திறக்குமாறு ஓட்டுநரிடம் கெஞ்சியுள்ளார். பேருந்திற்குள் இருந்த சக பயணிகளும் அந்தப் பெண்ணிற்காகக் குரல் கொடுத்துக் கதவைத் திறக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், ஓட்டுநரும் பெண் நடத்துனரும் கதவைத் திறக்க மறுத்துள்ளனர். மேலும், ஓட்டுநர் அந்தப் பெண்ணை அருவருக்கத்தக்கச் சொற்களால் திட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளிடம் அரசு ஊழியர்கள் கண்ணியத்துடனும் மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் எனப் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். சிக்னலில் பேருந்தை நிறுத்துவது போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் என ஒரு சிலர் விதிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும், கனமழையின் போது கூடச் சிறிதும் இரக்கமின்றி நடந்துகொண்ட ஓட்டுநரின் போக்கைக் கண்டித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.
