‘16 வயதினிலே’ இல்லை..  இதுதான் கவுண்டமணியின் முதல் படம்… பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என தொடர்ந்த பாரம்பரியத்தில் அடுத்ததாக வந்தவர் கவுண்டமணி. 80 களிலும் 90 களிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்.

மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கும் கவுண்டமணிக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அவர்  தன்னுடன் நகைச்சுவை நடிகரான செந்திலை இணைத்துக்கொண்டு செய்த காமெடிகளை சொல்லலாம். தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி இணை என அவர்களை சொல்லலாம்.

   

80 களின் இறுதியில் கதாநாயகர்களுக்கு இணையாக புகழைப் பெற்ற கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி அடையாததால் மீண்டும் தன்னுடைய நகைச்சுவை நடிப்புக்கே திரும்பி 2000 கள் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

2000 களுக்கு பிறகு உடல்நலக் குறைவு மற்றும் விவேக் மற்றும் வடிவேலு போன்ற புதிய நடிகர்களின் வரவால் கவுண்டமணி சினிமாவில் சில ஆண்டுகள் ப்ரேக் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் 49 0, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார். 80 வயதுக்கு மேல் ஆகிவிட்ட கவுண்டமணி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்துள்ளார்.

நாடக பின்னணியில் இருந்து வந்த கவுண்டமணிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்கள்தான். அதனால் பலரும் 16 வயதினிலே படம்தான் கவுண்டமணியின் முதல் படம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த படத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் சில படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

1964 ஆம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் சில வினாடிகளே வரும் டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார். அதை போல 1970 ஆம் ஆண்டு வெளியான எம் ஜி ஆரின் ராமன் எத்தனை ராமனடி மற்றும் 1971 ஆம் ஆண்டு வெளியான தேனும் பாலும் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதன் பிறகுதான் 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தில் பெயர் தெரியுமளவிலான வேடத்தில் நடித்தார்.