டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இணைந்து நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் “முக்கிய முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களில் உலகிற்கு இதுகுறித்த ஒரு “நல்ல செய்தி” வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ரூபியோ இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகமாக 60 நாட்கள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும், சர்வதேச அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியமாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முழுமையாகத் திறக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதும், சுங்கக் கட்டணம் ஏதுமின்றி ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதுமே அமெரிக்காவின் முதன்மை இலக்கு என்று ரூபியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்ட இன்னும் கூடுதல் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.