தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கான உதவி கோரி முத்துக்காளை வெளியிட்ட கண்ணீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், முத்துக்காளையின் மனைவிக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார். மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முத்துக்காளையைத் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர்.
அரசு மற்றும் மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இறுதிச்சடங்கின் போது மனைவியின் உடலருகே முத்துக்காளை கதறி அழுத காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தன. இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மனைவியின் மறைவுக்குப் பிறகு நடிகர் முத்துக்காளை தற்போது மீண்டும் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுக்கு கஷ்டம் என்று குரல் கொடுத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்க்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அமைச்சர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தன் மனைவி பிரிந்தது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட முத்துக்காளையின் இந்த ‘நன்றி’ வீடியோ, அவரது பெருந்தன்மையைக் காட்டுவதோடு, இணையவாசிகளையும் கலங்க வைத்துள்ளது.
