3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து இந்திய சிறுநீரக மருத்துவர் டாக்டர் சையத் முகமது கவுஸ் சாதனை படைத்துள்ளார். சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிக்கு, சீனாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோடிக் அமைப்புகள் மற்றும் அதிவேக 5ஜி இணைய வசதியைப் பயன்படுத்தி வெறும் 90 நிமிடங்களில் இந்தச் சிக்கலான மாற்று சிறுநீரகக் குழாய் அறுவை சிகிச்சை (Ureteral Reimplantation) வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை நிகழ்த்த வூகானில் உள்ள டோங்ஜி மருத்துவமனை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளியின் மருத்துவ ஆவணங்கள் ஆன்லைன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ரோபோடிக் கைகளின் இயக்கப் பாதைகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் நோயாளிக்கு மயக்க மருந்து அளித்து, நுண்ணிய அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் முப்பரிமாண (3D) படக்கருவிகள் கொண்ட ரோபோடிக் அமைப்பை நோயாளியுடன் இணைத்தனர்.

   

வூகானில் இருந்த மருத்துவர் கவுஸ், அங்குள்ள கன்சோல் மூலம் ஹைதராபாத் நோயாளியின் உடலின் முப்பரிமாண காட்சிகளைத் நேரலையாகப் பார்த்துக்கொண்டே ரோபோடிக் கைகளை இயக்கினார். அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தின் காரணமாக, மருத்துவர் கொடுக்கும் கட்டளைகள் வெறும் 200 மில்லிசெகண்டுகளுக்குள் ரோபோடிக் கைகளால் துல்லியமாகச் செயல்படுத்தப்பட்டன. இந்தியா மற்றும் சீனா இடையே மருத்துவத் துறையிலும், தொலைதூர மருத்துவ சிகிச்சை முறையிலும் ஏற்பட்டுள்ள இந்த மைல்கல் சாதனை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.