தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நலன் கருதி கல்வியாண்டின் இறுதி வரை மறுபணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஆசிரியர்களுக்கு, மறுபணி நியமனக் காலத்தில் 20% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு 80% சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய ஊதியப் பிடித்தம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் கருவூல கணக்குத் துறை மற்றும் நிதித் துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றதை அடுத்து, தற்போது மறுபணி நியமன காலத்தில் ஆசிரியர்கள் கடைசியாகப் பெற்ற முழு ஊதியத்தையும் வழங்கிட நிதித்துறை தெளிவுபடுத்தி ஆணையிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, மறுபணி நியமனக் காலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு உள்ளிட்ட 20% CPS தொகையை இனி பிடித்தம் செய்யத் தேவையில்லை. மேலும், மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி ‘ஒப்பந்த அடிப்படையிலான கணக்குத் தலைப்பின்’ (Contract Basis Head of Account) கீழ் பெற்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரும் ஆசிரியர்கள் தங்களின் மறுபணி நியமனக் காலத்தில் முழுமையான ஊதியத்தைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மறுபணியில் உள்ள ஆசிரியர்களிடம் ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் ஊதியம் பெற்ற கணக்குத் தலைப்பின் கீழ் அந்த வித்தியாசத் தொகை மீண்டும் கணக்கிடப்பட்டு அவர்களுக்குத் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த ஊதியத் தலைப்பில் நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களின் ஊதியத்தை 30.09.2026 வரை வழக்கமான ஊதியத் தலைப்பின் கீழேயே பெற்று வழங்கிட கருவூலங்களுக்குத் தற்காலிகத் தளர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மறுபணி நியமனத்தில் உள்ள ஆசிரியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
