தமிழகத்தில் விவசாய பணிகளுக்கான மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகள் விரைவாக புதிய மின் இணைப்புகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்புகளை வழங்கி வருகின்றது. நடப்பு நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள், அரசு சிறப்பு திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதியை திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர்.
இந்த நிலையில் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமல் காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை என்ற விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் விவசாயிகளின் நலனை கருதி தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பட விரும்பும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
