தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 16 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேரில் ஆய்வு செய்தார். தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்லும் இந்நிலையத்தில், பயணிகளுக்கான கூடுதல் அடிப்படை வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த புதிய மேம்பாட்டுப் பணிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலின் கட்டிடக் கலை, சிற்ப மரபு மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் சேவையும், கோவைக்கு புதிய ரயில் சேவையும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருச்செந்தூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவது குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களை விடப் பலமடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டுதோறும் 6,000 முதல் 7,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது என்றும், சென்னை – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ரயில்வே உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் நீளமான ஓடுபாதை அமைக்கும் பணிகளும், கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சென்னை – பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் திட்ட ஆய்வுகள் ஒருபுறம் நடக்க, அடுத்த ஆண்டு அகமதாபாத் – மும்பை இடையேயான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
