தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலானகர் பகுதியில், தாயுடன் ஸ்கூட்டரில் டியூஷனுக்குச் சென்ற 13 வயது பள்ளி மாணவி ஒருவர், அரசு போக்குவரத்து கழக பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலாநகர் பகுதியைச் சேர்ந்த கே.ராஜு என்பவரின் 13 வயது மகள் நவ்யஸ்ரீசத்யா, எச்.ஏ.எல் ) பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மாலையில் பாலாநகர் கமான் அருகே தாய் தன் மகளை ஸ்கூட்டரில் டியூஷனுக்கு அழைத்துச் சென்றபோது, குஷாயிகுடா டிப்போவைச் சேர்ந்த ஆர்டி பேருந்து ஒன்று இவர்களது வாகனத்தை பின்புறமாகப் பலமாக மோதியுள்ளது.
பேருந்து மோதிய வேகத்தில் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த நவ்யஸ்ரீசத்யா கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் சக்கரத்தின் கீழ் விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாகத் தாய் இடதுபுறமாக விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தாய் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
