தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் கொத்தகுடேம் த்ரீ டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காவல் நிலையத்திற்குள்ளேயே பயங்கர கலவரமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே எழுந்த கள்ளக்காதல் தகராறு முதலில் வாக்குவாதமாகத் தொடங்கி, பின்னர் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது. அந்த நேரத்தில் விநாயகர் சிலை விசர்ஜன பாதுகாப்பிற்காகப் பெரும்பாலான போலிஸார் வெளியே சென்றிருந்தனர். காவல் நிலையத்தில் குறைந்த அளவிலான காவலர்களே இருப்பதை அறிந்த இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமானோர், காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே புகுந்து ஒருவர் மீது ஒருவர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி ரகளை செய்தனர்.
காவல் நிலைய வளாகத்திலேயே அரங்கேறிய இந்த வெறியாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரவு நேரப் பணியில் இருந்த காவலர்கள், உடனடியாகச் செயல்பட்டு இரு தரப்பையும் விரட்டியடித்தனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
