விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த அக்டோபர் 11 அன்று நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கிய குழந்தை மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் காவல்துறையினர் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் இவ்வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.
தாய், தந்தை, சிறையில் இருந்த பழைய குற்றவாளி, கூட்டாளி, சாமியார், பூசாரி, சுடுகாடுகள் மற்றும் நள்ளிரவு லாரி டிரைவர்கள் எனப் பல கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாதகிரி முருகன் கோவிலில் ஹேமலதாவைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட சிறுமியைப் பார்த்ததாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் வழக்கிற்கு ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, நாமக்கல் பகுதியில் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து தமிழகத்தின் மிக முக்கிய உளவு அமைப்புகளான OCIU (திட்டமிட்ட குற்றங்கள் உளவுப் பிரிவு), SBCID (மாநில சிறப்புப் புலனாய்வு பிரிவு) மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பியின் சிறப்பு உளவுப் பிரிவு ஆகிய மூன்றும் அதிகாரப்பூர்வமாக களமிறக்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் நெட்வொர்க்குகள், சட்டவிரோத தத்து கொடுக்கும் கும்பல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான முதிய தம்பதியினர் குறித்து உளவுத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சேந்தமங்கலம், காளிப்பட்டி, கொல்லிமலை அடிவாரப் பகுதிகள் மற்றும் நாமக்கல் நகரின் முக்கிய தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர் காப்பகங்களில் ரகசிய இன்ஃபார்மர்கள் மற்றும் செல்போன் டவர் கண்காணிப்பு மூலமாக உளவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். செஞ்சியிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் உள்ள சட்டவிரோத நபர்களிடம் கைமாற்றப்பட்டதா அல்லது லாரிகள் மூலமாக கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
“என் குழந்தை கண்டிப்பாக உயிரோடு எங்கோ இருக்கிறாள்” என்ற தாயின் கதறலுக்கிடையே, 25 நாட்களைத் தாண்டியுள்ள இந்த மாயமான மர்ம வழக்கு தற்போது கிளைமாகை நோக்கி நகர்ந்துள்ளது. உளவு அமைப்புகளின் இந்த அதிரடி கூட்டு வேட்டை, சிறுமி ஹேமலதாவைப் பத்திரமாக மீட்டுத் தரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
