புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் மக்களை அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களைத் திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” எனச் சாடியுள்ளார். திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல என்றும், பொழுதுபோக்கு என்பது ஓய்வுதானே தவிர அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாடினான் நம் பாட்டன் பாரதி, ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்குத் தவெக அரசின் வழிகாட்டுதலா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர்களை நல்வழிப்படுத்துவதை விடுத்து, பொழுதுபோக்குக்கும் மதுவுக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சீமான், அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
