விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில், 7 வயது சிறுமி ஹேமலதா (ஹேமாவதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய இரவே படுக்கையறையிலிருந்து திடீரென மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமி காணாமல் போய் 22 நாட்களைக் கடந்த நிலையிலும், காடுகள், கிணறுகள், ஏரிகள் என பல இடங்களில் தேடியும் எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. உள்ளூர் காவல்துறையினரின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தற்போது இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒருபுறம் சிபிசிஐடி அதிகாரிகள் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் பெற்ற மகளைப் பறிகொடுத்த ஏழைப் பெற்றோர் வடிவேலு – பவானி தம்பதியினர் சொல்லொணாத் துயரத்தில் தவித்து வருகின்றனர். குழந்தை மாயமான நாள் முதலாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு எதுவும் செல்ல முடியாமல், சமையல் செய்யக்கூட வழியின்றி உணவின்றி பசி பட்டினியோடு அவர்கள் நாட்களை நகர்த்தி வரும் அவலநிலை எற்பட்டுள்ளது.
இதனிடையே, ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சிறுமியின் தாய் பவானி கண்ணீர் மல்கத் தனது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “எங்கள் குழந்தையின் தேடலுக்கு ஆதரவு அளிக்கும் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி. ஆனால், அதே வேளையில் சமூக வலைதளங்களில் சிலர் எங்களைப் பற்றிப் பரப்பி வரும் பொய் வதந்திகளும் அவதூறுகளும் எங்களை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதித்துள்ளது. எங்களுக்குப் பணமோ, புகழோ தேவையில்லை; எங்கள் மகளை உயிருடன் மீட்டுத் தந்தால் மட்டுமே போதும்” என்று நெஞ்சம் வெடித்துக் கதறியுள்ளார்.
குழந்தையை இழந்து வாடும் இந்தக் குடும்பத்தின் வேதனையைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக நேரடியாகத் தலையிட்டுத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பல திருப்பங்களுடன் நீடிக்கும் இந்த மர்ம வழக்கில், சிறுமி ஹேமலதாவைப் பத்திரமாக மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே தற்போது அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
