லண்டனில் எம்பிஏ படித்து வந்த இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் ரகசியமாக இந்தியா திரும்பி புனேவில் உள்ள வாடகை பிளாட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் மர்மத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த முக்தா தேஷ்முக் (34) என்ற பெண், கடந்த 2025 ஜூலை மாதம் எம்பிஏ படிப்பிற்காக லண்டன் சென்றார். குடும்பத்தினருடன் வழக்கமாக போனில் பேசி வந்த இவர், ஆகஸ்ட் மாதமே குடும்பத்திற்குத் தெரியாமல் ரகசியமாக இந்தியா திரும்பி புனேவின் கஹுஞ்சே பகுதியில் உள்ள ‘லோதா பெல்மொண்டோ’ குடியிருப்பில் வாடகைக்குத் தங்கி வந்துள்ளார்.
அக்டோபர் 24-க்குப் பிறகு அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் பதறிய பெற்றோர், லண்டனில் உள்ள அவரது தோழியைத் தொடர்புகொண்டனர். தோழி லண்டன் காவல்துறையிடம் விசாரித்தபோது முக்தா ஆகஸ்ட் மாதமே லண்டனை விட்டு வெளியேறிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அவரது வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அக்டோபர் 8 முதல் 25 வரை இந்தியாவில் ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற உணவு விநியோக தளங்களில் பரிவர்த்தனைகள் நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பாஜிநகர் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புனே பிளாட்டின் கதவை சாவி தயாரிப்பவர் மூலம் திறந்து பார்த்தபோது முக்தா சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவரது உள்ளுறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறப்பதற்கு முன் அவர் வீட்டிற்கு வரும் வேலைக்காரப் பெண்ணை “நான் வெளியே செல்கிறேன், வேலைக்கு வர வேண்டாம்” எனக் கூறியதாகத் தெரியவந்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
