டாஸ்மாக் கடைகளில் கடந்த சில மாதங்களாகவே மதுப்பிரியர்கள் விரும்பும் முன்னணி ரக மதுபானங்கள் தாராளமாகக் கிடைப்பதில்லை என்றும், அதேசமயத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு எம்ஆர்பி விலையை விட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலான தொகை பெறப்படுவதோடு, காலி பாட்டில்களைத் திரும்பப் ஒப்படைப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவி வந்தன. இந்தச் சூழலைச் சீரமைக்கும் நோக்கில், பாட்டிலுக்கான கூடுதல் கட்டணமான ரூ. 10-ஐ இனி தனி தொகையாக வசூலிக்காமல், நேரடியாக எம்ஆர்பி விலையிலேயே இணைத்து விற்பனை செய்யும் புதிய நடைமுறையை அரசு அண்மையில் அமல்படுத்தியது.
அரசின் இந்த புதிய உத்தரவின்படி, நவம்பர் 1-ஆம் தேதி முதல் மதுபானங்கள் கண்டிப்பாக எம்ஆர்பி விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும் போது அவர்களுக்கு ரூ. 10 திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்திற்கும் புதிய நடைமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென கடைகளைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் ரூ. 14,000-லிருந்து ரூ. 33,000 ஆக உயர்த்தப்பட்டு, வார விடுமுறை, காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் விக்னேஷ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 960 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிற ஊழியர்களைக் கடை அடைக்க வற்புறுத்திய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பின்னணியில் இருந்து ஒரு குறிப்பிட்ட குழு மூளைச்சலவை செய்து தூண்டி விடுவதாகவும், கடைகளைத் திறக்காத பட்சத்தில் மாற்றுத் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு கடைகள் இயக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பாட்டில் முறைகேடுகளைத் தடுக்க 4,800 டாஸ்மாக் கடைகளின் முன்பும் பாட்டில்களைத் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
இத்தகைய தொடர் பிரச்சனைகளுக்குத் தீர்வாக டாஸ்மாக்கை ஏன் தனியார்மயமாக்கக் கூடாது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசிடம் தனியார்மயம் குறித்த பரிசீலனை இருந்தாலும் அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனியார் மதுக்கடைகளை அரசுடைமையாக்கியதன் பின்னணியை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், தனியாரிடம் கொடுக்கும் போது ‘சிண்டிகேட்’ அமைத்து அரசுக்கு சேர வேண்டிய வருவாயைக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதைய சூழலில் தனியார்மயமாக்கல் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
ஒருபுறம் இந்த நிர்வாக ரீதியிலான போராட்டங்களும் விவாதங்களும் நீடித்து வரும் அதேவேளையில், மறுபுறம் சென்னை புறநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிமகன்கள் விரும்பும் குறிப்பிட்ட மதுபானங்கள் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளன. கடைகளுக்கு வரும் சில பெட்டி நல்ல சரக்குகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும், அதிக விற்பனையாகாத கடைகளுக்கு மட்டுமே மக்கள் விரும்பும் ரகங்கள் அனுப்பப்படுவதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விரும்பாத ரகங்களை வாங்க வற்புறுத்தப்படும் நிலை நீடித்து வருவதால், டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை மற்றும் விநியோக முறையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
