போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான மகேந்திர சிம்மன், அவரது மனைவி சாந்தி ஆகிய 3 பேர் மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் இதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சமூகச் சீர்கேட்டிலும் கொடூரக் குற்றத்திலும் ஈடுபட்ட மூவரும் தொடர்ச்சியாகச் சிறையிலேயே அடைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுச் சிறை அதிகாரிகளிடம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
