தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹபீப் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்தகங்களில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிரடிப் படை திடீர் சோதனை நடத்தியுள்ளது.
பொறுப்புத் துணை ஆணையர் கே.எஸ். ராவ் தலைமையில், ராஜேந்திர நகர், ஷாம்ஷாபாத் மற்றும் கோல்கொண்டா ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த டாஸ்க் போர்ஸ் காவல்துறையினர் இணைந்து இந்த கூட்டுச் சோதனையை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையின் போது பல கடைகளில் ‘மேட் இன் பாகிஸ்தான்’ என்ற முத்திரையிடப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், முறையான அரசு உரிமங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களையும் அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பொருட்கள் எப்படி விநியோகம் செய்யப்பட்டன என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள முதன்மை விநியோகஸ்தர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
