“சிக்கிய வீடியோ ஆதாரம்.. அம்பலமான அதிர்ச்சிப் பின்னணி”….. ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 7 சிறுமிகள் வாக்குமூலம்…. தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது விருந்தினர் இல்லத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண முடியாததால், வழக்கை முடித்துக்கொள்வதாக போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் படை நடத்திய மறுவிசாரணையில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு அவரது வாக்குமூலம் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், 84 வயதான ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

   

தற்போது 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து ஜெம் வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச்சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் அவர்கள் சிறுமிகளாக இருந்தார்களா மற்றும் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளின் தன்மை என்ன என்பது குறித்து போலீசார் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.

   

மேலும், இதில் வேறு ஏதேனும் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும், இந்த சம்பவங்களில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் கைவிடப்படும் நிலையில் இருந்து, நீதிமன்றத்தின் உறுதியான தலையீட்டால் தற்போது பெரிய அளவிலான வழக்காக உருவெடுத்துள்ள இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.