மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவி ஒருவர் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா நகரில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அவர் பயிற்சி வகுப்பிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட மாணவியை மீட்கக் கோரி அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்துத் தேடி, 16 நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியை மீட்டனர்.
மீட்கப்பட்ட மாணவி தமக்கு நேர்ந்த கொடூரங்களை கண்ணீருடன் விவரித்துள்ளார். பிரயாக்ராஜில் தங்களை அடைத்து வைத்திருந்த கடத்தல்காரர்கள், தமக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை மயக்க ஊசிகளைப் போட்டதாகக் கூறியுள்ளார். மேலும், முக்கியக் குற்றவாளியான மோஹித் ஸ்ரீவாஸ் என்பவர் தம்மைக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது சிகரெட்டால் உடம்பில் சூடு வைத்து, கத்தியால் குத்திக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், மாணவியின் சகோதரரின் புகைப்படத்தைக் காட்டி, அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி மோஹித் ஸ்ரீவாஸ் கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மோஹித் ஸ்ரீவாஸ், அங்கித் ஸ்ரீவாஸ், ஹல்லு ராஜ்புத் மற்றும் அவர்களது தோழர்கள் உட்பட அரை டஜன் நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவி கடும் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தால் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை மூன்று சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
